தனிப்பட்ட கொள்கைகளை பொது கொள்கைகளாக மாற்றுவது ஆபத்தானது
தனிப்பட்ட கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் பாலியல் விருப்பங்களை அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய சமூக கொள்கையாக மாற்ற முயற்சிப்பது மிகவும் பயங்கரமான ஓர் நிலைமை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது கொள்கை துஷ்பிரயோகமாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். பாடசாலை புத்தகங்களில் உள்ளடக்கம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனி ஒரு நபரின் பாலியல் விருப்பு வெறுப்பு குறித்து விமர்சனம் செய்யவோ அல்லது அவர்களை அவதூறு செய்யவோ தான் தயார் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் வரலாற்றில் ஓரினச் சேர்க்கை விருப்புடைய பிரதமர்கள் கல்வி அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவை தங்களது தனிப்பட்ட கொள்கையாகவே இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அரசு அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை பயன்படுத்தி தனது தனிப்பட்ட கொள்கைகளை அமுலாக்க முயற்சிப்பது ஒரு துஸ்பிரயோகமாகவே கருதப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறான கொள்கை ரீதியான துஷ்பிரயோகங்களை செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு கல்வித்துறையில் மாற்றங்களை செய்வதற்கு திறமை இல்லை எனவும் அதனால் அந்த விடயத்தை எதிர்கால அரசாங்கங்களிடம் பொறுப்பு கொடுத்து விட்டு நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.