சீனாவினால் இலங்கையில் அமைக்கப்படும் சார்ஜிங் மையங்கள்:தூதுவர் வெளியிட்ட தகவல்
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் (Charging Point) சீனாவின் நன்கொடையாக நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனா உள்ளிட்ட உலகளாவிய வாகனச் சந்தையிலிருந்து அதிக அளவில் மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் இது குறித்து கவனம் செலுத்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத் மற்றும் சீனத் தூதர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று (29) வெளியுறவு அமைச்சில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
பேரிடரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க சீன அரசாங்கத்திடம் இருந்து அவசர உதவியை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக முன்மொழியப்பட்டது. சீன அரசாங்கம் அது தொடர்பில் கவனத்தும் என தூதர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், சீனா உள்ளிட்ட உலகளாவிய வாகன சந்தையிலிருந்து அதிக அளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய இலங்கை விரும்புவதால், இந்த சார்ஜிங் மையங்களை (Charging Point) நிறுவுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் எதிர்காலத்தில் அதிக மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதால் இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவை சாதகமாக ஏற்றுக் கொண்ட சீன தூதர், இது குறித்து சீன அரசாங்கத்திடம் தெரிவிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.