கௌரவமான உரிமை கோரி மன்னார் மாந்தையில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
வடக்கு, கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவுத் திட்டத்தின் 86 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (10.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை.
அதிகாரப் பரவலாக்கம்

இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.
கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த போரட்டத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், மற்றும் சிவில் அமைப்பு
பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,மற்றும்
பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


