மகிழடித்தீவு படுகொலை சம்பவம்: சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
அநுரகுமார திஸாநாயக்கவின் காலத்திலாவது மகிழடித்தீவு படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் நேற்று (28.1.2026) மாலை மகிழடித்தீவில் உள்ள நினைவுத்தூபியருகே நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், தெரிவிக்கையில், கொக்கட்டிச்சோலை மற்றும் மகிழடித்தீவு ஆகிய இரண்டு கிராமங்களில் 1987ம் ஆண்டிலும்,1991ம் ஆண்டிலும் 180க்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
நீதி
3 வயது குழந்தையில் இருந்து பெண்கள் ஆண்கள் வயோதிபர்கள் மற்றும் இளைஞர்கள் என்கின்ற பேதம் இல்லாமல் அனைவரும் தமிழர்கள் என்கின்ற காரணத்திற்காக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறு சுட்டு கொலை செய்யப்பட்டும் கூட எத்தனை அரசாங்கங்கள் மாறி இருக்கின்றன.ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, டிங்கிரி பாண்டா விஜயதுங்க, மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூட நீதி கிடைக்கவில்லை.
இப்போது இறுதியாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.அவருடைய காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனை நாங்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.