யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதம்: 3 காவலாளிகளிடம் பொலிஸார் தீவிர விசாரணை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில், அங்கு கடமையிலிருந்த மூன்று காவலாளிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்றுமுன்தினம்(05.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவம்
கடந்த வெசாக் பண்டிகையை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், இரவு வேளையில் இனந்தெரியாத சிலரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக, வெசாக் தினத்தன்று பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலாளிகள் நேற்றுமுன்தினம்(05) கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.