வெனிசுலா எண்ணெய் டேங்கர் விவகாரம்: அமெரிக்கா–ரஷ்யா இடையே பதற்றம்
வெனிசுலா எண்ணெயுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு எண்ணெய் கப்பலைக் கைப்பற்ற அமெரிக்கா இரகசிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் பெல்லா 1 (Bella 1) என அழைக்கப்பட்ட இந்த கப்பல், தற்போது மரினேரா என்று பெயர் மாற்றப்பட்டு, கயானா கொடியிலிருந்து ரஷ்ய கொடிக்கு மறுபதிவு (reflag) செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த கப்பலை பாதுகாப்பதற்காக ரஷ்யா ஒரு நீர்மூழ்கிக் கப்பல் (submarine) மற்றும் பிற கடற்படை கப்பல்களை அட்லாண்டிக் கடலில் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தடை
இதே நேரத்தில், அந்த கப்பலை அமெரிக்க படைகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. கப்பல் தற்போது ஐஸ்லாந்து மற்றும் பிரிட்டன் தீவுகள் இடையே உள்ள வட அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து வருகிறது.

முன்னதாக, இந்த கப்பல் அமெரிக்க தடைகளை மீறி ரான் எண்ணெய் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் தற்போது கப்பல் வெறுமையாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சர்வதேச கடல் சட்டம்
இதேவேளை, இந்த கப்பல் சர்வதேச கடல் சட்டங்களுக்கு உட்பட்டு, ரஷ்ய கொடியின் கீழ் சர்வதேச கடலில் பயணம் செய்கிறது என்றும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தேவையற்ற அளவில், குறித்த கப்பலில் கவனம் செலுத்துவதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

கப்பலின் பெயர் அல்லது கொடியை மாற்றினாலும், தடைக் வரலாறே அமெரிக்க நடவடிக்கைக்கு முக்கியம் என கடற்படை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ரஷ்ய கொடிக்கு, கப்பல் மாற்றப்பட்டதால், அமெரிக்கா, அதில் சட்டப்படி கப்பலில் ஏறி சோதனை செய்வது மேலும் சிக்கலாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.