வல்வெட்டித்துறை சந்தையில் நடக்கும் அநீதி..! பாதிப்படையும் வியாபாரிகள்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி இடம்பெறுவதாக சந்தை வியாபாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கடந்த பல வருடங்களாக 220 ரூபாவாக இருந்த நில வாடகை திடீரென 1,420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மரக்கறி சந்தையில் அநீதி
நில வாடகை அதிகரிப்பு தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு பல தடவைகள் எழுத்துமூலம் அறிவித்த போதிலும், தமது தரப்பு நியாயத்தை சபை கவனத்தில் கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும், தாம் வரி செலுத்தவில்லை எனக் கூறி, தமது வியாபாரப் பொருட்களை நகர சபையினர் சில நாட்களுக்கு முன்னர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது வருமானத்திற்கு ஏற்ற வகையில் குறைந்த பரப்பளவிலான இடத்தை வாடகைக்கு பெற்று அதற்கான வரியை செலுத்துவதற்கு தாம் தயாராக இருந்ததாகவும், குறைந்த நிலப்பரப்பை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
சந்தை குத்தகைதாரர் தம்மிடமிருந்து வரியைப் பெற மறுத்ததாகவும், அதேவேளை தாம் வரி செலுத்தவில்லை என நகர சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரி குறிப்பிட்டார்.
தமது வியாபாரப் பொருட்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, தற்போது எந்தவித தொழிலும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உபதவிசாளரிடம் கருத்து கோரப்பட்டபோது, தாம் தற்போது தொலைவில் இருப்பதால் உடனடியாக பதிலளிக்க முடியாது எனவும், பிறிதொரு நாளில் பதில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.