ஈழத்து எழுத்தாளரான வெள்ளத்தம்பி தவராசா காலமானார்
மட்டக்களப்பு - ஓட்டமாவடிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த வெள்ளத்தம்பி தவராசா நேற்று காலமானார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த பல்துறைக் கலைஞரும், எழுத்தாளரும், பிரதேச செயலாளருமான வெள்ளத்தம்பி தவராசா கடந்த பல வருடங்களாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள நிதியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அங்கு கடமையாற்றி வந்த நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.
பல்துறைக் கலைஞர்
நடிகர், கூத்துக் கலைஞர், கவிஞர், இலக்கியவாதி, ஆய்வாளர், எழுத்தாளர், நாடக இயக்குனர், கலை இலக்கிய விமர்சகர், குறும்பட தயாரிப்பாளர் என
பல்துறைக் கலைஞராக தவராசா விளங்கியுள்ளார்.
'படி' கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராக இவர் தனது இலக்கியத் துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
ஆசிரியராக தனது சேவையை ஆரம்பித்த தவராசா திட்டமிடல் உதவிப் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மாநகர ஆணையாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் என அரச நிர்வாக சேவையின் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இதுவரை தனித்திருத்தல் (கவிதைத் தொகுப்பு) என் கொலை காரர்கள் (சிறுகதைத் தொகுப்பு) மங்கையராய் பிறப்பதற்கே (நாடக நூல்) அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை என இவரது நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன.
மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வு
தவராசா பிரதேச செயலாளராக கடமையாற்றிய இடங்களில் பிரதேச கலாசார பேரவை மூலமாக பல மலர்களை வெளியிட்டு கலை இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியதோடு சிறுகதை, கவிதை என பல பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வந்துள்ளார்.
அமரரான தவராசா தனது இளமைப் பருவத்திலிருந்தே பாடசாலை மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பொது மக்களுக்கும் நாடகங்கள் கூத்துக்கள் மூலமாக மதுபோதைக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் அரங்குகளை நடத்தி வந்ததோடு அதற்கான பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



