கிழக்கில் பிரதி ஆணையாளர் இல்லாமையினால் வாகன உரிமையாளர்கள் பாதிப்பு
கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்குப் பிரதி ஆணையாளர் இல்லாமையினால் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான அலுவலகம் திருகோணமலையிலுள்ளது.
இருந்த போதிலும், வாகன வருமான உத்தரவு பத்திரம் (REVENUE LICENCE) ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால் வாகன உரிமையாளர்கள் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கல்
இதனால் வாகன வருமான உத்தரவு பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பல மாதங்கள் கடப்பதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக இன்னும் வாகன உரிமையாளர்கள் கடனாளியாக ஜீவநோபாயத்தை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்குப் பிரதி ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாணத்திற்கு இன்னும் "பிரதி ஆணையாளர்" நியமிக்கப்படவில்லை.
கடிதம் மூலம் அறிவிப்பு
இதனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பெற்றுக் கொள்ள முடியாத வருமான உத்தரவு பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வாகன உரிமையாளர்கள் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் சம்பந்தமாகக் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ்.ரத்னாயக்கவிடம் கேட்டபோது,
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தான் கேள்விப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள மோட்டார் வாகன திணைக்களத்திற்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளரை நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.




