வாகன இறக்குமதிக்கான அனுமதி! மற்றுமொரு நெருக்கடி நிலை தொடர்பில் எச்சரிக்கை
வாகன இறக்குமதி செலவு உயர்வடைந்தால் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பில் பற்றாக்குறை ஏற்படும். வாகன இறக்குமதி திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் என பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டு கையிருப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புதிய வரித் திருத்தத்துக்கு அமைய வாகனத்தின் கொள்வனவு விலை உயர்வடையுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் வாகன இறக்குமதியின் போது கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரி கொள்கைக்கு அமைவாகவே வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையின் சந்தையில் தனித்த விலை காணப்படுகிறது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இறக்குமதி செலவு 20 பில்லியனை காட்டிலும் அதிகளவில் காணப்பட்டது. வட்டி வீதம் மிகவும் குறைவான மட்டத்தில் காணப்பட்டமை அதற்கு பிரதான காரணியாகும்.
நாட்டில் மீண்டும் அவ்வாறான நிலை தோற்றம் பெற்றுள்ளது. வட்டி வீதம் மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகிறது.
நாட்டின் தேவையைக் கருத்திற் கொள்ளாமல் வாகன இறக்குமதிக்கு அனைவருக்கும் வாய்ப்பளித்தால் பெருமளவானோர் கடன் பெற்று வாகனங்களை இறக்குமதி செய்ய முற்படுவார்கள். அதனால் வெளிநாட்டு கையிருப்பு நாட்டை விட்டு வெளியேறும். இறக்குமதி செலவு உயர்வடையும்.
இவ்வாறான செயற்பாடுகள் பொருளாதாரத்துக்குச் சாதகமானதாக அமையாது. இறக்குமதி செலவுகளை இயலுமான அளவில் குறைத்துக் கொண்டு ஏற்றுமதிகளை அதிகரித்துக் கொண்டு பண்ட கணக்குகளின் துறைகளை நிலையான தன்மையில் பேண வேண்டும்.
வாகன இறக்குமதி செலவு உயர்வடைந்தால் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பில் பற்றாக்குறை ஏற்படும்.
பொருளாதார பாதிப்பின் காரணமாகவே வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. ஆகவே வாகன இறக்குமதி திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.