சித்தங்கேணியில் அனுமதிப்பத்திரமின்றி மரம் ஏற்றி வந்த வாகனம் விபத்து
சித்தங்கேணி - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகில் அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரம் ஏற்றி வந்த மகேந்திரா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவமானது இன்று(09) நடைபெற்றுள்ளது.
விபத்தில் பொறியியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவங்கள் (PHOTOS) |
வாகன சாரதி கைது
இந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய வாகன சாரதி வாகனத்துடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மரத்திற்கு அனுமதிப்பத்திரம் இல்லை என்று தெரிந்த பின்னர் சாரதியை தப்பிக்க வைப்பதற்காக, ஏற்றிவரப்பட்ட முதிரை மரங்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு எதேச்சையாக செல்லும்போது இவ்வாறு மரங்கள் வேறு வாகனத்தில் ஏற்றுவதை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
மரங்களை இடம்மாற்றும் இந்த செயற்பாடு வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோப்பாய்
யாழ். கைதடியில் இருந்து கோப்பாய்க்கு செல்லும் பிரதான வீதியில் ஹயஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் அருகில் உள்ள மதகில் மோதியுள்ளது.
இந்த விபத்து சம்பவமானது இன்று(09) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் சந்திக்கு அருகாமையில் குறித்த வாகனம் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக கோப்பாய் வீதிப்போக்குவரத்து பாதுகாப்பு பொலிஸார்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட வாகன சாரதி
சம்பவத்தின் போது ஹயஸ் வாகன சாரதி காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.