பேஸ்புக் ஊடாக வாகன விளம்பர மோசடி! பொதுமக்களை ஏமாற்றிய இளைஞர் கைது
பேஸ்புக் ஊடாக வாகன விற்பனை விளம்பரங்களை வெளியிட்டுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்த விசேட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்தகம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பேஸ்புக் வணிகக் கணக்கொன்றின் ஊடாக வாகன விற்பனை விளம்பரங்களை வெளியிட்டுத் தருவதாகக் கூறி, அதற்கான கட்டணங்களையும் நிர்ணயித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு 5000 ரூபா, இரண்டு வாரங்களுக்கு 10000 ரூபா மற்றும் ஒரு மாதத்திற்கு 15000 ரூபா எனக் கட்டணம் அறவிட்டு, தொலைபேசி ஊடாகப் பொதுமக்களைத் தொடர்புகொண்டு பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணை
எனினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் விளம்பரங்களை வெளியிடாமல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து நம்பிக்கை துரோகம், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.