மரக்கறி விலைகளில் பாரிய வீழ்ச்சி:பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்து கிடக்கும் மரக்கறிகள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாது விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் பல இடங்களில் இருந்து மரக்கறிகளை கொண்டு வந்துள்ளனர்.
90 வீதமாக குறைந்த வியாபாரிகளின் வருகை
வெளி பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வியாபாரிகள் வருகை 90 வீதமாக குறைந்து காணப்படுவதன் காரணமாக மரக்கறிகளின் விலை பெரியளவில் குறைந்து வருகிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சில மரக்கறிகள் விற்பனை செய்ய முடியாமல், பழுதடைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொண்டு வரப்படும் கெரட், போஞ்சி, லீக்ஸ் போன்றவை விற்பனை செய்யப்படாததால், பொருளாதார மத்திய நிலையத்தில் அவை குவிந்து கிடக்கின்றன.
செலவுகளை குறைக்க முடியவில்லை
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசைகளில் நின்றி, எரிபொருளை நிரப்பிக்கொண்டு, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு தமது அறுவடைகளை கொண்டு வந்த போதிலும் அவற்றை கொள்வனவு செய்ய வியாபாரிகள் வராததால், செலவுகளை கூட குறைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மலையக விவசாயிகள் கூறியுள்ளனர்.
கடந்த நாட்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது, எனினும் தற்போது வியாபாரிகள் கேட்கும் விலைகளுக்கு அவற்றை விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறிகள் பழுதடையும் நிலையில்
மரக்கறி தோட்டங்களில் மரக்கறிகள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போதிலும் அவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தினால், அவை தோட்டங்களிலேயே அழிந்து போகும் நிலைமை உருவாகியுள்ளது.
அதேவேளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் மக்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது. பல வர்த்தகர்கள் எரிபொருள் வரிசைகளில் நிற்பதால், வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மரக்கறி வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.