நாடு பாதியளவில் ஸ்தம்பித்துள்ளது:சம்பிக்க ரணவக்க
வேலைத்திட்டமின்றி நாடு பயணிக்கும் நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும் என 43வது படைப் பிரிவு அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைத்து, சரியான திட்டங்களுக்கு அமைய மக்களுக்கு தெளிவுப்படுத்தி, மாற்று நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியம்.
எரிபொருள் நெருக்கடி உக்கிரம்
இதற்கு அரசியல்வாதியின் முன்னுதாரணம் மிகவும் அவசியம். எரிபொருள் நெருக்கடி மிகவும் உக்கிரமாக உள்ளது.எரிபொருள் இல்லை. குறுகிய காலத்தில் அங்கும் இங்கும் 500, 200 மில்லியன் டொலர்களை கடன் வாங்கி எரிபொருளை இறக்குமதி செய்யக் கூடிய பயணம் அல்ல.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட 54 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் அத்தியவசிய சேவைகளை நிறைவேற்றும் வாகனங்கள் உள்ளன. உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் இல்லை. சில பிரதேசங்களில் நெல் அறுவடை நடக்கின்றது.
எரிபொருள் இல்லை. காய்கறிகளை கொண்டு செல்லும் சுமை ஊர்திகளுக்கு டீசல் இல்லை. அறுவடை செய்யும் பொருட்களை எடுத்துச் செல்ல வழியில்லை. மீனவர்கள் மீன்பிடி செல்ல டீசல் இல்லை.
இந்த நிலைமையானது உணவு உற்பத்தியை மோசமாக பாதிக்கும். மறுபுறம் தொழிற்சாலைகள். குறிப்பாக டொலர்களை உழைக்கும் தொழிற்சாலைகள் எரிபொருள் பிரச்சினை காரணமாக ஸ்தம்பித்துள்ளன.
அனைவரையும் மகிழ்விப்பதற்கு பதிலாக அத்தியவசிய சேவைகளை முன்னெடுத்துச் சென்று மக்களுக்கு உண்மையை கூறி முன்நோக்கி செல்வதே அரசாங்கத்திற்கு இருக்கும் சிறந்த மாற்று வழி.
இல்லையென்றால், அடுத்து வரும் தினங்களில் அல்லது சில வாரங்களுக்குள் நாடு பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலைமைக்கு சென்று, சமூக ரீதியிலும் பாரிய கிளர்ச்சிகள் வெடிக்கலாம்.
ஜனாதிபதி கட்டாயம் பதவி விலக வேண்டும்
சரியான வேலைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுத்த வேண்டும். அனைத்து கட்சிகளும் இணைந்து அதனை செய்ய வேண்டும்.
ஜனாதிபதி பதவியை பிடித்துக்கொண்டிருக்க மேற்கொள்ளும் முயற்சி, ராஜபக்சவினர் திரைமறைவில் இருந்து அரசாங்கத்தை வழிநடத்தும் முயற்சி என்பன பிரச்சினைகளை தீர்க்காது.
அதேவேளை போல் வேலைத்திட்டங்கள் இன்றி செல்லும் இந்த பயணத்தை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லையென்றால், அடுத்த சில வாரங்களின் மிகப் பெரிய அனர்த்தத்தில் அது முடிவு செய்யப்படலாம்.
தற்போதும் நாட்டில் பாதி வேலைகள் நடப்பதில்லை. நாடும் அரைவாசி நின்று போயுள்ளது. உரிய நிர்வாகம் இன்றி முன்னெடுக்கும் போது நாடு முற்றாக ஸ்தம்பிக்கலாம்.
ஜனாதிபதி கட்டாயம் பதவியில் இருந்து விலக வேண்டும். சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்து உரிய வேலைத்திட்டத்துடன் செல்ல வேண்டியது பிரதமரின் பொறுப்பு எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.