அரசாங்கங்கள் எடுத்த முடிவுகளுக்கு மக்கள் பொறுப்புக்கூறும் நிலைமை என்கிறார் டட்லி சிறிசேன
அரசாங்கங்கள் எடுத்த தீரமானங்கள் மற்றும் முடிவுகளுக்கு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் எனவும் பிரபல அரிசி வர்த்தகரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் அரசாங்கங்கள் எடுத்த தீர்மானங்கள் மற்றும் முடிவுகளுக்கு தற்போது நாட்டு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்
தவறு செய்தவர்களுக்கு எதிரான நாட்டின் சட்டத்தை நீதியான முறையில் நடைமுறைப்படுத்தி,முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற யோசனையை நான் முன்வைக்கின்றேன்.
சட்டத்தை நடைமுறைப்படுத்த தகுதி, தராதம், பதவிகள் எதனை பார்க்கக் கூடாது. தவறு யார் செய்தாலும் தவறு. தற்போது நாட்டில் எரிபொருள் இல்லை. நாளை அரிசி இல்லாமல் போனால்,ஏற்பட போகும் பட்டினிக்கு யாரும் பொறுப்புக் கூற முடியாது.
இதனால், நாட்டு மக்களின் உழைப்பிலும் வியர்வையிலும் உருவான அனைத்து வர்த்தகர்களும், இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்காக நிவாரணமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன்.
குறிப்பாக உணவு சம்பந்தமாக நிவாரணமான நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இலங்கை ஒரு விவசாய நாடு.
எனினும் நாட்டை கடந்த 74 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை 74 ஆண்டுகளுக்கு பின்னர் நாம் தற்போது அனுபவித்து வருகின்றோம்.
அரசியல்வாதிகளின் குறைகளை பற்றி பேசினாலும் தற்போது பயனில்லை. எரிபொருள், உணவு பொருட்களை இறக்குமதி செய்ய கடன் கேட்பதை நான் கண்டேன்.
74 ஆண்டுகளாக குடும்ப அரசியல்
கிடைத்த ஒரு பில்லியன் கடனில் 55 மில்லியன் டொலருக்கு உரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை பார்த்தேன். 74 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் தொடர்புகள் பற்றி எமக்கு பிரச்சினையில்லை.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இதுவரை நாட்டில் குடும்ப அரசியலே இருந்து வந்துள்ளது. ஒரு தொடர்பு வலைமைப்பு இருக்கின்றது. எவருக்கும் பொறுப்பு கூறலில் இருந்து தப்பிக்க முடியாது.
70 ஆம் ஆண்டு எனக்கு 10 வயது. 70 ஆம் ஆண்டு முதல் 77 ஆம் ஆண்டு வரை சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தது. 70 ஆம் ஆண்டு முதல் 77 ஆம் ஆண்டு எனக்கு 17 வயது ஆகும் வரை நாங்கள் நாட்டில் காணப்பட்ட அனைத்து வரிசைகளிலும் நின்றோம்.
நாங்கள் எரிபொருள் வரிசைகளில் நிற்கவில்லை, அப்போது எம்மிடம் வாகனங்கள் இருக்கவில்லை.சைக்கிளில் கூட்டுறவு கடைக்கு சென்று, அரிசி, சீனி,கருவாடு, டின் மீன் போன்றவற்றையும் பாணை வரிசையில் நின்று வாங்கி வருவோம்.
35 ஆண்டுகள் கொடுக்கல், வாங்கல் செய்து வந்த இலங்கை வங்கியின் கடன் கணக்கை கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் நிறுத்தினர். மக்கள் வங்கியில் நெல்லுக்கு வழங்கும் கடனை நிறுத்தினர்.
இரண்டு வங்கிகளின் கணக்குகளை மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், சில நேரம் ஜனாதிபதியாகவும் இருக்கலாம், அனைவரும் 35 ஆண்டுகளாக விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய பெற்று வந்த கடனை நிறுத்தினர்.
இந்த ஆட்சியாளர் இப்படித்தான் நாட்டை ஆட்சி செய்ய முயற்சித்தனர். அனைத்தையும் தனிப்பட்ட பெறாமை, விரோதம், பகைக்கு அமைய செயற்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் 225 பேருக்கு தமது அதிகாரத்தையும் பதவியையும் பாதுகாத்துக்கொள்ளவும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இருக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் 225 பேரும் ஒன்றாக அமர்ந்து நாட்டுக்கு உகந்த முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.
மக்களாகிய நாம் உருவாக்கிய அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து இனிவரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களின் போது கூடுதல் கவனம் செலுத்துமாறு மக்களிடம் கோருகிறேன் எனவும் டட்லி சிறிசேன கூறியுள்ளார்.