அம்பாறையில் அனுஷ்டிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவு நாள்
அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீரமுனை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று(13.08.2026) வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள படுகொலை நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வீரமுனை படுகொலை
12.08.1990ஆம் ஆண்டு வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் மீது விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த மிலேச்சத்தனமாக படுகொலை நடத்தப்பட்டது.
வெட்டியும் சுட்டும் தாக்கியும் சுமார் 85க்கும் அதிகமானோர் இதன்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன்போது படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனர்.

அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரையில் தெரியாத நிலையில், இந்தப் படுகொலை சம்பவம் இடம்பெற்று 36 வருடங்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் வீரமுனை மக்களால் நடாத்தப்பட்டுள்ளது.
இன்று காத்தான்குடி படுகொலை மற்றும் ஏறாவூர் படுகொலை தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் வீரமுனை படுகொலை தொடர்பில் பேசுவதற்கு முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



