வவுனியாவில் மீட்கப்பட்ட பெருமளவிலான மஞ்சள்: விசாரணையில் வெளிவந்த தகவல்
புதிய இணைப்பு
வவுனியா, ஏ9 வீதியில் மஞ்சள் கொண்டு சென்ற வாகனம் வவுனியா- ஈரப்பெரியகுளம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு 2 மணிநேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஏ9 வீதியில் கூலர் ரக வாகனத்தில் மஞ்சள் கொண்டு செல்லப்படுவதாக ஈரப்பெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த பொலிஸார் பெருந்தொகை பச்சை மஞ்சளினை மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
அத்துடன் அதனை கொண்டு சென்ற இருவரையும் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த பச்சை மஞ்ள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவில்லை என்பது பொலிஸாருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வாகனத்துடன் மஞ்சள் விடுவிக்கப்பட்டதுடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரையும் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: திலீபன்
முதலாம் இணைப்பு
வவுனியா சட்டவிரோதமான முறையில் மஞ்சளினை கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி கடத்தப்படவிருந்த பெருமளவான மஞ்சளினை இரட்டைபெரியகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பெருமளவிலான மஞ்சளினையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 26 மற்றும் 27 வயதுடைய சந்தெகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை இரட்டைபெரியகுளம் பொலிஸரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



