திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட பாடசாலை நிதி: வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திருப்பி அனுப்பப்பட்டமைக்கு எதிராக வவுனியா, சாளம்பைக்குளம் அல்-அக்ஸா மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டமானது சாளம்பைக்குளம் அல் -அக்ஸா பாடசாலைக்கு முன்பாக இன்று (18.12.2023) நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டில் நான்கு வருடங்களிற்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்
இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
"நான்கு வருடங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் குறித்த பாடசாலைக்கான கட்டடம் ஒன்றினை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
எனினும் நாட்டின் நிலை காரணமாக கட்டிட பணிகள் இடைநிறுத்தப்பட்டு குறித்த நிதியானது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மீண்டும் அவ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் குறித்த நிதியினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இடைநிறுத்தி இருக்கின்றார் என்ற செய்தியினை அறிந்து கொண்டோம்.
எனவே, இடைநிறுத்தப்பட்ட நிதியினை விடுவித்து குறித்த கட்டட வேலையினை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்னிறுத்தியே நாம் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம்" என தெரிவித்துள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ''கல்வியில் அரசியல் கலக்காதே, அரச நிதியை தடை செய்யாதே, கல்விக்கு தடையாக இருக்காதே'' போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அபிவிருத்தி திட்டம்
இது தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களிடம் கேட்டபோது,
“எனது பிரதேசத்துக்கு வரும் எந்த அபிவிருத்தி திட்டங்களையும் நிறுத்தும் செயற்பாட்டை நான் மேற்கொள்ள மாட்டேன். இது சில அரசியல் காரணங்களுக்காக ஒரு அரசியல்வாதி இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு இருக்கின்றார்.
எம்மைப் பொறுத்த வரையில் எமது மதத்தின் பிரகாரம் அழிவு சத்தியம் என்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. இதற்கு ரிசார்ட் வர தயாராக இருக்கிறாரா என நான் கேட்க விரும்புகின்றேன்.
குறிப்பாக இந்த வேலை திட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டிருந்தமை எனக்கு தெரியும். ஆகவே இந்த திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கின்றது.
அதேவேளை தமிழ், சிங்கள பாடசாலைகளிலும் இவ்வாறான ஒரு நிலைமை இருக்கின்றது. அதனையும் செயல்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஜனாதிபதியை சந்திப்பதற்காக சென்றிருந்த போது அங்கு செயலாளர் தான் இருந்தார். அவரிடம் இந்தப் பாடசாலைகளுக்கான இந்த திட்டத்தின் போது ஏனைய தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளையும் உள்வாங்குமாறு ஒரு கோரிக்கையை வைத்திருந்தேன்.
ஆனால் இந்த திட்டத்தினை நிறுத்துமாறு வியாழேந்திரனையோ அல்லது முசரப் எம்.பியையோ அழைத்துச் செல்லவும் இல்லை அவ்வாறான ஒரு சந்திப்பு இடம் பெறவும் இல்லை. இது முற்றிலும் பொய்யான ஒரு தகவல்.
ஆகவே இந்த அழிவு சத்தியத்தை செய்வதற்கு அவரை நான் அழைத்து நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |