வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (09.09) உத்தரவிட்டது.
எதிர் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து மூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
தாக்கல்
குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில், இருதரப்பு விவாதங்களையும் எழுத்து மூல சமர்ப்பணமாக வழங்குமாறும் அதனை கடந்த 28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து மூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.