வவுனியா வைத்தியசாலை சுகாதார தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணி
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வவுனியா வைத்தியசாலையின் சுகாதார தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலை வளாகத்திற்குள் நேற்று (02.04.2024) மதியம் ஆரம்பமான குறித்த பேரணியானது யாழ். வீதிவழியாக சென்று மீண்டும் வைத்தியசாலையினை அடைந்து நிறைவு பெற்றுள்ளது.
சுகாதாரத்துறையின் கொடுப்பனவு
இதன்போது கருத்து தெரிவித்த தொழிற்சங்கத்தினர்,
“சுகாதாரத்துறையின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட கொடுப்பனவு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. நிலுவைக்கொடுப்பனவுகள், சீருடைக் கொடுப்பனவுகள் போன்றன நீண்டகாலமாக வழங்கப்படவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அதனால் எந்த பயனும் கிடைக்காத நிலமையே நீடிக்கின்றது.
எனவே எமது கோரிக்கையினை அரசாங்கம் செவிமடுக்காது விடில் இன்றைய தினத்திலிருந்து தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தாயாராகி வருவதாக” தெரிவித்துள்ளனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சொந்தநாட்டில் வேலை செய்யும் எமக்கா இந்தநிலமை, அரசாங்கமே வீடுசெல், வாக்குறுதி அளித்தபடி பொருளாதார கோரிக்கைகளை நிறைவுசெய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
மேலும் குறித்த பேரணியில் அரச தாதியஉத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |