6 வருடங்களாக பூட்டப்பட்டிருக்கும் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் குறித்து எழுப்பப்படும் கேள்வி
வவுனியா மாவட்டமானது விவசாயத்தையும், தோட்டச் செய்கையையும் பிரதானமாக கொண்ட ஒரு மாவட்டம். இம்மாவட்ட விவசாயிகளின் சந்தைவாய்ப்பு வசதிகளை இலகுபடுத்தும் முகமாக கடந்த 2016ஆம் ஆண்டு பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இது வவுனியாவில் அமைக்கப்பட்டாலும் வட மாகாணத்திற்கான ஒரு பொருளாதார மத்திய நிலையமாக செயற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் செயற்பாட்டால் தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தையில் அமைப்பதா என்ற பலத்த இழுபறிக்கு மத்தியில் வவுனியா மதவு வைத்தகுளத்தில் 291 மில்லியன் ரூபாய் செலவில் 2016ஆம் ஆண்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில், மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டு அதன் கட்டுமாண பணிகள் 2018ஆம் ஆண்டு முடிவடைந்து இருந்தன.
கோவிட் தொற்றாளர்கள்
நவீன வசதிகளுடன் கூடியதாக 55 கடைத் தொகுதிகளைக் கொண்டதாக பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமாண பணிகள் முடிவடைந்து 6 வருடங்கள் ஆகியுள்ள போதும் அது திறக்கப்படாது புறாக்களின் சரணாலயமாகவும், தேனீகளின் கூடாரமாகவும், பற்றைகள் மண்டியதாகவும் காட்சியளிக்கிறது.
குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பல அமைச்சர்களும், பல அதிகாரிகளும் பார்வையிட்டு திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்ட போதும் அந்த வாக்குறுதிகள காற்றிலையே பறந்திருந்தது. கோவிட் தொற்று காலத்தில் குறித்த பொருளாதார மத்திய நிலையமானது கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடமாக குறிப்பிட்ட சில மாதம் பயன்படுத்தப்பட்டது.
அதன் பின் மீண்டும் மூடப்பட்டு, மூடப்பட்டிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தில் பாதுகாப்பு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டு 6 வருடமாக அரச பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மூடியுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சாரக் கட்டணம், நீர்கட்டணம் என்பன வேறு. திட்டமிடப்படாத அபிவிருத்தியாலும், உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் மக்கள் பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இந்நிலையில், இறுதியாக கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் வருகை தந்து குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதுடன், அதனை திறப்பது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வவுனியா நகரப் பகுதியில் உள்ள இலுப்பையடியில் மரக்கறி விற்பனை செய்வோர் என பலரிம் கலந்துரையாடிய போதும் திறப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை.
மரக்கறி விற்பனை
குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைந்துள்ள பகுதி நகரில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதால் அது வர்த்தக நடவடிக்கைக்கு பொருத்தமற்றது எனக் கூறி மரக்கறி விற்பனையாளர்கள் அங்கு செல்ல ஆர்வம் காட்டமையே இந்த நிலைக்கு காரணம். ஆனால் விவசாயிகள் அதனை விவசாய அமைப்புக்களிடம் கொடுங்கள்.
அல்லது புதிய கேள்வி கோரல் மூலம் வழங்குங்கள் என கூறுகின்ற போதும், இலுப்பையடியில் மரக்கறி விற்பனையில் ஈடுபடுவோரின் அழுத்தம் காரணமாக கடந்த கால அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் மௌனமாகவே இருக்கின்றனர். தற்போது, இலுப்பையடிப் பகுதியில் மரக்கறி விற்பனையில் ஈடுபடுவோர் தமக்கு இலுபையடியில் உள்ள இடமும், பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடைத் தொகுதியில் ஒன்றும் தரவேண்டும் என கோருகின்றர்.
ஆனால் இரண்டு இடங்களிலும் மரக்கறி விற்பனை இடம்பெற்றால் பொருளாதார மத்திய நிலையத்தின் எழுச்சி என்பது கேள்விக் குறியே. அத்துடன் ஒரே தேவைக்காக ஒரே நபருக்கு இரண்டு அரச சலுகைகளையும் வழங்கினால் ஏனைய அப்பாவி மக்களின் நிலை என்ன?
தோட்டச் செய்கையாளர்களின் நிலை என்ன..? வவுனியா நகரமயமாக்கல் திட்டத்தில் இலுப்பையடியில் உள்ள மரக்கறி விற்பனை செய்யும் இடங்கள் உள்வாங்கப்பட்டுள்ள இடமாக இருப்பதால் அதனை வேறு நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.
இது தவிர, இரண்டு இடங்களிலும் மரக்கறி விற்பனை என்பதை நிறுத்தி ஒரு இடமாக மாற்றுவதன் மூலமே பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க முடியும் என்பதே தோட்டச் செய்கையாளர்களின் கருத்தாகும். இன்னொரு விடயமும் உண்டு. தற்போது இலுப்பயைடியில் உள்ள மரக்கறி கடைகளை குத்தகைக்கு பெற்றோர் சிலரே அதில் வியாபாரம் செய்கின்றர்.
அரசியல் தலையீடுகள்
பலர் அதனை உப குத்தகைக்கு கொடுத்து அதில் பணம் சம்பாதிக்கின்றார்கள். ஆகவே புதிய பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 55 கடைகளும் தற்போது வியாபாரம் செய்பவர்களுக்கு வழங்கப்படுமா அல்லது உப குத்தகைக்கு விட்டோருக்கும் வழங்கப்படுமா என்பதே மக்களது கேள்வியாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின் கடந்த 2 ஆம் திகதி வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்ட போது, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், 291 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது, சில அரசியல் தலையீடுகள் மற்றும் இனம் சார்ந்த பிரச்சினைகளாலும், வியாபாரிகள் அல்லது தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமை போன்றவற்றினால் அதனை ஆரம்பிப்பதற்கு தற்போது வரை ஒரு இழுபறி நிலை காணப்படுகின்றது.
மேலும் இது தொடர்பாக பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்ட போதும் அதனை திறக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. எனவே அடுத்த மாத நடுப் பகுதியிலே இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபரும் இணைந்து இது தொடர்பாக கலந்துரையாடுவதுடன், இப்பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கை அடுத்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட அனைவரையும் அழைத்து கலந்துரையாடுவதன் மூலமாக இதற்கான தீர்வினை இலகுவாக எடுக்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
ஆக, ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை 291 மில்லியன் ரூபாய் செலவில் கட்டிவிட்டு 6 வருடமாக பூட்டப்பட்டு உள்ளது என்றால் அதற்கு பொறுப்பாளிகள் யார்..? நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இவ்வாறான திட்டமிட்டப்படாத திட்டங்களும் காரணம் என்பதை மறுக்க முடியாது. எனவே, புதிய அரசாங்கமாவது இதனை திறந்து வைக்குமா என்பதே பலரது கேள்வி.





பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 05 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
