வவுனியா வைத்தியசாலை குளிரூட்டி பழுது விவகாரம்.. செல்வம் அடைக்கலநாதன் காட்டம்
வவுனியா வைத்தியசாலையில் பல நாட்களாக இயங்காமல் இருக்கின்ற பிரேத அறையின் குளிரூட்டி சீர் செய்வது தொடர்பில் ஆளுங்கட்சியினர் தமது சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லாமை கவலைக்குரிய விடயம் என வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (18.04.2025) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், "வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிரூட்டி பல மாதங்களாக செயல்படாமல் காணப்படுகின்றது.
இதன் காரணமாக மரணமடைந்தவர்களின் உறவினர்கள் தமது சொந்த செலவில் சடலத்தை செட்டிகுளம் வைத்தியசாலையின் குளிரூட்டியில் வைத்து மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை ஏற்பட்டுள்ளது.
சிரமத்தில் மக்கள்
பல ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து சடலத்தை செட்டிகுளத்துக்கும் வவுனியாவுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுகின்றது.
இது இந்த பிரதேச மக்களிற்கு பாரிய சுமையை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகும். தமது ஆட்சியில் பாலும் தேனும் ஓடும் என்று அறிக்கை விட்டு மக்களை பொய்யாக திசை திருப்பி பிரதி அமைச்சுக்களையும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தியினர் வெறும் வாய்ச் சவால் விடுவதற்கு மாத்திரமே சிறப்பானவர்களாக காணப்படுகின்றனர்.
தமது பிரதேசத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுவது தொடர்பில் அறிந்து கொள்ளவோ அதற்கான நடவடிக்கையை தமது ஆட்சியில் உள்ள சுகாதார அமைச்சருடன் உடனடியாக கதைத்து செயல்படுத்தவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர்கள் தான் மீண்டும் மக்களிடம் பொய்களை கூறி திசை திருப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.
இருதய சிகிச்சை பிரிவு
தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மாத்திரமல்ல தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கூட கேட்பதற்கு தயாரில்லை என்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களே சாட்சியாகவுள்ளனர்.
மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியாத பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாம் பாரிய சாதனைகளை செய்து விட்டதாக தம்பட்டம் அடிப்பதிலேயே காலத்தை கடத்தி வருகின்றனரே தவிர ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகின்ற வடக்கில் முக்கியமான தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறும் வைத்திய சாலையின் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாதவர்களாக தான் இவர்கள் உள்ளார்கள் என்பதை உண்மை.
இது மாத்திரமன்றி வவுனியா வைத்தியசாலையில் கோலாகலமாக திறக்கப்பட்ட இருதய சிகிச்சை பிரிவு இதுவரை செயல்படுத்தப்பட முடியாமல் வைத்திய நிபுணர்கள் இன்றி மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பிலும் அவர்கள் அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. எமது கருத்துக்களை கேட்க கூட தயாராக இல்லாத இந்த அரசாங்கம் தாமாவது தங்களது பிரதேசத்தில் தேவைகளை அறிந்து செயல்படுத்த முன்வர வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
