அதிகாரிகளின் முறைகேடுகளால் அரசாங்கத்திற்கு ஏற்படும் பேரிழப்பு
வர்த்தகர்கள் வரி வசூல் செய்கிறார்கள் ஆனால் அதை அரசாங்கத்திற்கு வழங்குவதில்லை. மேலும் அதிகாரிகளின் முறைகேடுகளால் பாரிய அளவில் வரி இழப்பு ஏற்படுகின்றது என ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற “2024 வரவு செலவுத்திட்டம்” தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரி இழப்புக்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வற் வரி முறையாக அரசாங்கத்திற்கு கிடைப்பதில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வற் வரி முறையாக வசூலிக்கப்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% பொருளாதாரத்தில் சேரும் சாத்தியம் உள்ளது. ஆனால் தற்போது அந்த வரியிலிருந்து 2% சதவீதம் மட்டுமே பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகிறது.
அது தொடர்பான தேடலின்போது மூன்று முக்கிய வரி இழப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் இழப்பு என்னவென்றால், வர்த்தகர்கள் வரி வசூல் செய்கிறார்கள் ஆனால் அதை அரசாங்கத்திற்கு வழங்குவதில்லை.
இரண்டாவது வரி இழப்பு, அதிகாரிகளின் முறைகேடுகளால் ஏற்படும் வரி இழப்பு ஆகும். மூன்றாவது வரிக் இழப்பு வரி விலக்குகள் மூலம் ஏற்படுகிறது.
இந்த வரி இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதே பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்.
2019 முதல் பகுதியில், VAT 15% ஆக இருந்தது. 2020 இல் இது 8% சதவீதமாக குறைக்கப்பட்டது. இது 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதே விகிதத்தில் இருந்தது.
VAT 8% ஆக குறைக்கப்பட்டாலும் 2020 இல் பொருட்களின் விலை குறையவில்லை. 15% வற் வரியை வைத்து இந்த மூன்று ஆண்டுகளில் சரிந்த பொருளாதாரத்தில் ஏற்றத்தை உருவாக்குவதும் சாத்தியமற்றது. எனவே, வற் வரியை 18 % சதவீதமாக திருத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |