வாகனக் கொடுப்பனவுகள் தொடர்பான விசாரணை: வருணி பொகஹவத்த இடைநீக்கம்
மாத்தறை கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி பொகஹவத்த, சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சமிக விக்ரமசிங்க இந்த இடைநீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தமைக்கும் அதன் குத்தகைக் கட்டணங்களைச் செலுத்தியமைக்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தை வெளிப்படுத்தவோ உறுதிப்படுத்தவோ தவறிய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விசாரணை
இது தொடர்பான விசாரணைகளின் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் அவரிடமிருந்ததாகக் கூறப்படும் ஹொண்டா வெசல் (Honda Vezel) வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் 1 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான நிதி மோசடியில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், குறித்த வாகனத்தின் குத்தகைக் கட்டணங்களைச் செலுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.