சங்கானை பிரதேச செயலகத்தின் கோரிக்கையை நிராகரித்த வலிகாமம் பிரதேச சபை
சங்கானை பேருந்து நிலைய வளாகத்தின் வடக்கு பகுதி எல்லையோரமாக வாகன தரிப்பிடம் மற்றும் வீதி ஆகியவை அமைப்பதற்காக சங்கானை பிரதேச செயலகம் முன்வைத்த கோரிக்கையை வலிகாமம் மேற்கு பிரதேச சபை நிராகரித்துள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் நேற்றைய(23.07.2026) மாதாந்த அமர்வில் குறித்த விடயம் தொடர்பான கோரிக்கை ஒன்றை பிரதேச செயலகம் விடுத்துள்ளதாக தவிசாளர் ஜயந்தனால் பிரஸ்தாபிக்கப்பட்டு அது தொடர்பாக சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன.
இடர்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு
இதன் போது சபை உறுப்பினர் செல்வக்குமார் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த பேருந்து நிலைய வளாகம் வலி.மேற்கு பிரதேச சபையின் உடைமையாக இருப்பதனால் அந்த வளாகத்தினுள் அம்மாச்சி உணவகமும் இயங்கி வருகின்றது.
அத்துடன் மறுபுறம் முச்சக்கர வண்டி தரிப்பிடம் இருக்கும் நிலையில் பிரதேச செயலகம் தமது சேவை பெறுநர் வருகைக்காக ஒரு வீதி அமைக்கவும் சிறு வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு கொட்டகை ஒன்றை அமைப்பதற்குமான அனுமதியை பிரதேச சபையிடம் கோரியுள்ளது.

ஆனால் குறித்த நிலப்பரப்பில் பிரதேச சபை மக்கள் நலன்சார் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஆலயத்தின் முன் பகுதியாக குறித்த இடம் இருப்பதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் சபையின் ஆளுகை இந்த கையளிப்பூடாக எதிர்காலத்தில் இல்லாது போகும் நிலை வருவதற்கான ஏதுநிலை இருக்கின்றது.
சபைக்குரிய உடைமையாக இருக்கும் ஒன்றை இன்னொரு அரச நிறுவனத்தின் வாகன தரிப்பிடத்திற்காக வழங்குவதையோ குறித்த நிறுவனத்துக்குச் செல்வதற்கான வீதியை அமைப்பதற்கான அனுமதி வழங்குவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
கோரிக்கை நிராகரிப்பு
மறுபுறம் குறித்த சபையின் முன்னாள் தவிசாளரும் இந்நாள் உறுப்பினருமான நாகரஞ்சினி ஐங்கரன், இரு நிறுவனங்களும் மக்களுக்கான சேவை வழங்கும் ஒன்றாக இருக்கும் நிலையில் போக்குவரத்திற்காக வீதியை அமைக்க இணக்கப்பாடு செய்ய முடியும்.

அதுவும் எழுத்து மூலமாக அல்லாமல் ஒரு சமரச இணக்கப்பாட்டுடன் மட்டுமே முன்னெடுக்கலாம். ஆனால் ஏனைய பல சபையின் உறுப்பினர்கள் குறித்த நிலப்பரப்பை பிரதேச செயலகத்துக்கு வழங்க முடியாது என்றும் தற்போது நடைமுறையில் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் தொடர்ந்தும் செயற்படுவதே சிறந்தது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சபையின் உறுப்பினர்கள் குறித்த விடயத்திற்கு அனுமதியளிக்க விரும்பாமையால் தொடர்ந்தும் காணப்படுகின்ற நடைமுறையின் அடிப்படையில் குறித்த செயற்பாடுகள் தொடரும் என சபையில் தீர்மானிக்கப்பட்டதுடன் பிரதேச செயலகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan