தொன்மையும் உயிர்ப்பும் கொண்ட மொழி தமிழ் – வடக்கு ஆளுநர் பெருமிதம்
இந்த உலகின் தொன்மையான மொழிகளில் இன்றும் உயிர்ப்புடன் உள்ள மொழிகளில் ஒன்றாக எமது தமிழ் மொழி இருப்பது எமக்கு எல்லோருக்கும் பெருமையாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் போற்றும் வகையிலான 'தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் - 2026' நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24.07.2026) கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் மொழி
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, எங்களுக்குப் பெருமை சேர்ப்பது எமது தமிழ் மொழிதான். திருக்குறளை இந்த உலகுக்குத் தந்ததும், செறிவான இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதும் எமது மொழிதான்.

சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும், தனது தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்காகவே தனது பெரும்பாலான நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தார்.
அவர் தமிழ் மொழியை நேசித்தது போலவே, பிற மொழிகளையும் மதித்தார். உலக அறிவைப் பெற்றுக்கொண்டு அதைத் தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரது சிந்தனை இன்று கூடக் கல்வி உலகில் மிகப் பெரிய வழிகாட்டுதலாக உள்ளது.
அவர் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று 'யாழ்நூல்' ஆகும். பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த தகவல்களை ஆராய்ந்து அவர் வெளியிட்ட இந்த நூல், தமிழரின் கலை நாகரிகம் மற்றும் இசை மரபின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் அரிய ஆய்வு நூலாகும்.
ஆளுநர் நா.வேதநாயகன்
ஒரு மனிதன் தன்னலமின்றி அறிவுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்தால், அவர் மறைந்த பிறகும் அவரது பெயர் என்றென்றும் வாழும் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம். எனவே, அவர் காட்டிய அறிவுப் பாதையில் நாம் அனைவரும் பயணிப்போம்; தமிழ் மொழியைப் பேணுவோம், நமது கலாசாரத்தைப் பாதுகாப்போம்,' என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், 'தமிழ் மொழிக்கு இலங்கையர்கள் ஆற்றிய பங்களிப்பு' என்ற விசேட நூல் வடக்கு மாகாண ஆளுநரால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலின் முதல் பிரதியை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ரீ சாய் முரளி ஆளுநரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தவிர்க்க முடியாத காரணங்களால் நேரில் கலந்துகொள்ளவில்லை. எனினும், நிகழ்வுக்கான அவரது பிரத்தியேக உரை ஒலிவடிவில் சபையில் ஒலிக்கச் செய்யப்பட்டது.
முன்னதாக, காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமான பிரம்மாண்டமான தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலம், காங்கேசன்துறை வீதி மற்றும் வைத்தியசாலை வீதி ஊடாக யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் சுவாமி விபுலானந்தர், இயல், இசை மற்றும் நாடக உருவகங்களைக் கொண்ட சிறப்பு ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.
அரசகரும மொழிகள்
அத்துடன், புரவி நடனம், பொய்க்கால் குதிரை, வசந்தன் கும்மி, மயில் நடனம், கோலாட்டம், காவடி, கரகாட்டம் உள்ளிட்ட பல பாரம்பரியக் கலை நிகழ்வுகளும் ஊர்வலத்துக்குச் சிறப்பூட்டின.
அரசகரும மொழிகள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமை தாங்கினார்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் வரவேற்புரையை நிகழ்த்தினார். அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன கெட்டியாராச்சி, பேராசிரியர் பாரதி கெனடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிவபூமி அறக்கட்டளையின் நிறுவுனர் கலாநிதி ஆறுதிருமுருகன் சுவாமி விபுலானந்தர் நினைவஞ்சலி உரையை வழங்கினார்.
நூல் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் நிகழ்த்தினார். பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan