வெளிநாட்டவருக்கு 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த வலம்புரிச் சங்குகள் பறிமுதல்
வெளிநாட்டவர் ஒருவருக்கு ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தயாராக இருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(07.07.2026) நண்பகல் கிண்ணியா - மாஞ்சோலை பகுதியிலிருந்து நிலாவெளி பகுதிக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்த நிலையிலேயே குறித்த வலம்புரிச் சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு வலம்புரிச் சங்குகள் மீட்பு
திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரின் வசமிருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் இரண்டாம் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நுவன் திலகரத்ன அவர்களின் வழிநடத்தலில், பொலிஸ் கான்ஸ்டபிள்களான (83611) சில்வா, (32591) சதுரங்க மற்றும் (81752) தினேஷ் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட வலம்புரிச் சங்குகளும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.