வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதம்
வடமராட்சி - கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டமானது இன்று(03.09.2026) காலை 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச அபிவிருத்தி
இதன்போது றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், நாட்டின் வருமானதிற்கு சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
அதற்கு நியாயமற்ற எதிர்ப்புக்களும் பொய் பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வெற்றிலை கேணி கடற்கரையை ஒரு நீல கடற்கரையாக மாற்ற வேண்டும்.

அத்துடன் பிரதேச அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல விடயங்கள் நடந்தால் நான் ஏற்றுக் கொள்வேன். எதிரான விடயங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
மக்களிற்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை யாரும் தடுக்க கூடாது. மக்களின் நலன்கள் சார்ந்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதிகள், மற்றும் செயற்றிட்டங்களுக்கான அனுமதிகள், வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் எதிர்ப்பு
இந்திய நிறுவனம் ஒன்றிற்கு முதலீட்டுக்காக ஆழியவழையில் காணி வழங்குவதற்கு சபையில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதனையடுத்து ஆழியவழையில் இடம் பொருத்தமில்லாத நிலையில் உள்ளதாலும், ஆழியவழை, வெற்றிலைக்கேணி ஆகிய பகுதி மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கும் என்ற காரணத்தையும் முன்வைத்து மக்கள் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பின்னர் குறித்த இந்திய முதலீட்டு திட்டத்திற்கு ஆழியவழையில் காணி வளங்குவதில்லை என்றும் அதனை நாகர்கோவில் கிராமத்திற்கு மாற்றுவது என்றும் தீர்மானிகப்பட்டுள்ளது.
மேலும் அவசர வெளியேற்ற பாதைகள் புனரமைப்பை துரிதப்படுத்துதல், டித்வா புயலால் பாதிக்கபட்ட வீதிகளை புனரமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் வனஜீவராஜிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கும் மக்களின் கோரிக்கைகள் தொடர்பி்ல் வன ஜீவராஜிகளின் திணைக்களத்தின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.