சலேவிற்கு எதிராகக் கருணா வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
கருணா அம்மான் லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா அம்மான் தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களk; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO