ட்ரம்பின் வரிவிதிப்பால் நேரடியாக இலங்கை இழக்கும் 500 கோடி ரூபா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) இலங்கை மீதான 44 சத வீத வரி விதிப்பால் வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கடற்றொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (9) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பதப்படுத்தப்பட்டு தகரத்தில் அடைக்கப்பட்ட நண்டு சதையானது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
ட்ரம்பின் வரிவிதிப்பு
இந்த நண்டு சதை ஏற்றுமதியால் இலங்கைக்கு வருடாந்தம் 500 கோடி ரூபா வருமானம் கிடைக்கப்பெறுகின்றது.
இந்தநிலையில், ட்ரம்பின் வரி விதிப்பால் நண்டு உற்பத்தியாளர்கள் அமெரிக்காவிற்கு நண்டு சதையை ஏற்றுமதி செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த சூழலானது வடமாகாண கடற்றொழிலாளர்களினுடைய நேரடி சந்தை வாய்ப்பை பாதிக்கின்றது.
எனவே இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடாத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |