உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிய அமெரிக்கா
உலக சுகாதார அமைப்பில் இருந்து, தமது நாட்டை விலக்கிக்கொள்ள அமெரிக்க எடுத்துள்ள முடிவு குறித்து உலக சுகாதார அமைப்பு தமது கவலையை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் தமது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புவதாகவும் அந்த அமைப்பு எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணித்தியாலங்களில், டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) தனது நாட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்தமை தொடர்பிலேயே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கணிசமான நிதி உதவி
கோவிட் தொற்றுநோயைக் கையாண்டமை குறித்து, பலமுறை விமர்சித்து வரும் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும் என்று கட்டளையிடும் நிர்வாக உத்தரவில் கடந்த திங்களன்று கையெழுத்திட்டார்.
தனது பதவியேற்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், சீனாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா இந்த அமைப்புக்கு மிக அதிக பணம் செலுத்துவதாகக் கூறினார்.
எனினும், உலக சுகாதார அமைப்புக்கும் அமெரிக்காவை ஏமாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மறுபரிசீலனை
ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்புக்கு, மிகப்பெரிய நன்கொடை அளிக்கும் அமெரிக்கா, அந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத கணிசமான நிதி உதவியை வழங்குகிறது.
இந்தநிலையில், அமெரிக்கர்கள் உட்பட உலக மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதில் உலக சுகாதார அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அமைப்பின் பேச்சாளர் தாரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எனவே, அமெரிக்கா தமது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |