ஈரானுக்கு கூடுதல் அமெரிக்கப் படைகளை அனுப்ப டிரம்ப் நிர்வாகம் திட்டம்!
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் உத்திகளை விரிவாக்கம் செய்யவும், டிரம்பிற்கு கூடுதல் ராணுவத் தேர்வுகளை வழங்கவும் இந்த நடவடிக்கை உதவும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எண்ணெய் டாங்கர்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்ய வான் மற்றும் கடற்படைகளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால், ஈரானின் கடற்கரைப் பகுதிகளில் தரைப்படை வீரர்களை இறக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அழிப்பதற்குப் பதில், அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. மார்ச் 13 அன்று இங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பிற்குள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான செயல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
புதிய போர்களில் அமெரிக்காவை ஈடுபடுத்த மாட்டேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த டிரம்பிற்கு, தரைப்படை வீரர்களை அனுப்புவது அரசியல் ரீதியாகப் பெரும் சவாலாக அமையும். பெப்ரவரி 28 முதல் இதுவரை 7,800-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது.
ஈரானின் 120-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போரில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர், சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். தரைப்படைகளை அனுப்புவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆனால், ஈரானின் ஏவுகணை சக்தி மற்றும் கடற்படையை அழிப்பது, அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது போன்ற 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) இலக்குகளை அடைவதில் அதிபர் உறுதியாக உள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மத்திய கிழக்கில் சுமார் 50,000 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். அடுத்த வாரம் 2,000 கடற்படை வீரர்கள் அங்கு செல்ல உள்ளனர்.
அதேசமயம், ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் பொறுப்பை மற்ற நாடுகளே ஏற்க வேண்டும் எனவும், அல்லது ஈரானை முழுமையாக 'முடித்துவிட்டு' அங்கிருந்து வெளியேறலாம் எனவும் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.