தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கும் அமெரிக்கா
அமெரிக்க இராணுவம் தனது 'இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின்' பெயரிலிருந்து 'இந்தோ' என்ற சொல்லை நீக்கி, மீண்டும் 'பசிபிக் கட்டளைப்பீடம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளமையானது பிராந்திய அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.
கன்டக்கி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை விரிவுரையாளர் நஸ்முஸ் சாகிப் இது குறித்து எழுதியுள்ள கட்டுரையில், தெற்காசியாவில் ஒவ்வொரு விடயத்திற்கும் இந்தியாவின் அனுமதியையோ அல்லது நிலைப்பாட்டையோ எதிர்பார்ப்பதை வொஷிங்டன் தற்போது நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியக் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டு முதலாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் போது, சீனாவிற்கு எதிரான ஒரு ஜனநாயகக் கூட்டணியாக இந்தியாவை முன்னிலைப்படுத்தும் நோக்குடனேயே 'இந்தோ' என்ற பதம் சேர்க்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய பெயர் மாற்றமானது, பிராந்தியத்தில் இந்தியாவின் ஏகபோக செல்வாக்கு அல்லது 'வீட்டோ' (Veto) அதிகாரம் முடிவுக்கு வருவதை உணர்த்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா தற்போது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை இந்தியாவின் பிராந்தியக் கொள்கையின் நிழலில் இருந்து பார்க்காமல், அவற்றின் சொந்த நலன்கள் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நேரடியாகக் கையாளத் தொடங்கியுள்ளது.
இராணுவ மற்றும் வர்த்தக உறவு
குறிப்பாக, பாகிஸ்தான் தனது கனிம வளங்கள் மற்றும் மூலோபாய இருப்பிடத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் நேரடி இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. அதேபோன்று, பங்களாதேஷ் தனது உற்பத்தித் துறை மற்றும் வங்காள விரிகுடாவின் முக்கியத்துவம் காரணமாக, வொஷிங்டனின் நேரடி முதலீடுகளை ஈர்த்து வருகின்றது.

அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவை வெறும் மூலோபாய பங்காளியாக மட்டுமன்றி, மருந்தாக்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் தங்களுக்கு ஒரு வர்த்தகப் போட்டியாளராகவும் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாகவே, அமெரிக்கா எந்தவொரு தனிப்பட்ட நாடும் தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல், பிராந்திய நாடுகளுடன் இவ்வாறான நேரடி மற்றும் நடைமுறைச் சாத்தியமான issue-by-issue (விடயத்திற்கு விடயம்) ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.