இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சந்திப்பு
தமிழ்நாட்டிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்களை, தமிழ் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
குறித்த கூட்டமானது, நேற்று (04.07.2026) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, ஈழத்தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
முக்கிய விடயங்கள்..
குறிப்பாக, ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்த்தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் அடிப்படையிலான சமஷ்டி அரசியல் தீர்விற்கு இந்திய அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழர் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டியதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய மற்றும் இலங்கை தமிழ் மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைதாண்டிய மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியதன் அவசியம், தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மற்றும் உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஆகியனவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஈழத்தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான நீதியான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி குழுவொன்றை அமைத்து, ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டுமென கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


