ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்! அதிகாரத்தை கையில் எடுத்த இராணுவம் - பரபரப்பாகும் நிலை
உக்ரைன் இராணுவம் ரஷ்ய எல்லைக்குள் சுமார் 900 கிலோமீட்டர் ஆழத்தில் ஊடுருவி, ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ இலக்குகளைக் குறி வைத்து அதிகாலை பாரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளது.
இந்த உக்கிரமான தாக்குதலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிராந்தியத்தில் மட்டும் 72 ஆளில்லா விமானங்களை தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக லெனின்கிராட் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் துரோஸ்தென்கோ தெரிவித்துள்ளார்.
389 உக்ரைனிய ட்ரோன்கள் இடைமறிப்பு
ரஷ்யா நாடு முழுவதும் மொத்தம் 389 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்துள்ளதாகக் குறிப்பிட்ட போதிலும், லெனின்கிராட் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்களை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ட்ரோன்களின் வழிகாட்டுதல் அமைப்புகளை முடக்குவதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் புல்கோவோ விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், உள்ளூர் மொபைல் இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதன்போது, ட்ரோன் பாகங்கள் விழுந்ததில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கிரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீட்டர்ஹோஃப் அரண்மனை வளாகம் ஆகியவை சேதமடைந்துள்ளன.
அத்துடன், பின்லாந்து எல்லையை ஒட்டியுள்ள வைசோட்ஸ்க் துறைமுகப் பகுதியிலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள குரோன்ஸ்டாட் கடற்படைத் தளத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் போர்ச் செலவுகளுக்கு நிதியுதவியாக விளங்கும் அதன் எரிசக்தி உள்கட்டமைப்பை முடக்குவதே இந்த தாக்குதலுக்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்களின் காரணமாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் 42.74 வீதம் முடக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் உரிமை கோரியுள்ளது.
எரிபொருள் நிலையங்கள் மீது தாக்குதல்..
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரஷ்யாவின் 8 பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 60 இற்கும் மேற்பட்ட எரிபொருள் சேமிப்பு தொட்டிகள் அழிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்யா உக்ரைனின் மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் உள்ள எரிவாயு உற்பத்தி நிலையம் ஒன்றின் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் அங்கு தீ விபத்து ஏற்பட்டு அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நேற்று(03) உக்ரைனின் சுமி நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய குண்டுவீச்சில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 27 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.