அமெரிக்கா - தாய்வான் வர்த்தக ஒப்பந்தம்: இறக்குமதி பொருட்களுக்கு வரிக்குறைப்பு!
தாய்வானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியைக் குறைக்கவும், அமெரிக்கப் பொருட்களின் விற்பனையைப் பெருக்கவும் வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தாய்வானும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, தாய்வான் பொருட்களுக்கான பொதுவான வரி விகிதம் 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இணையான வரி விகிதமாகும்.
இதற்குப் பிரதிபலனாக, அமெரிக்காவின் எரிசக்தி, விமானங்கள் மற்றும் இயந்திரங்களை சுமார் 85 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க தாய்வான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தாய்வானின் பொருளாதாரத்திற்கு ஒரு "திருப்புமுனை" என்று அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்-தே (William Lai Ching-te) பாராட்டியுள்ளார்.
வர்த்தகத் தடை நீக்கம்
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வாகன உதிரிப்பாகங்கள், இரசாயனங்கள், பால் பொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட 99 சதவீத அமெரிக்கப் பொருட்களுக்கான வர்த்தகத் தடைகளைத் தாய்வான் நீக்கவுள்ளது.

பதிலுக்கு, தாய்வானின் புகழ்பெற்ற ஓர்க்கிட் மலர்கள், தேநீர், 'பபுள் டீ' (bubble tea) மூலப்பொருட்கள், அன்னாசிப்பழம் மற்றும் கோப்பி போன்ற 2,000-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அமெரிக்கா வரிவிலக்கு அளித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் தாய்வானின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிற்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
சிப் (semiconductor) தயாரிப்பில் உலகளவில் முன்னணியில் இருக்கும் தாய்வான், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது வர்த்தக நாமத்தை சர்வதேச சந்தையில் மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.