இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதியில் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் 7 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இரு தரப்பு பேச்சு வார்த்தை
மேலும் இந்திய பிரதமர் மோடியுடன் 8 ஆம் திகதி ஜோ பைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாகவும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பார் எனவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாநாட்டில் ஜோபைடன், ஏனைய உறுப்பு நாட்டு தலைவர்களுடன் தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.
ஜோ பைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |