இரு தசாப்தங்களுக்குப் பின்னர் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்க இராணுவம்
இரு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஈராக்கில் எஞ்சியிருந்த அமெரிக்கப் படைகள் அனைத்தும் அந்நாட்டை விட்டு வெளியேறவுள்ளன.
அமெரிக்கப் படைகளின் இந்த வெளியேற்றமானது, ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்ற பலத்த கவலையைத் தோற்றுவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈராக்கிய அதிகாரிகளுக்கிடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எதிர்வரும் புதன்கிழமைக்குள் அமெரிக்கப் படைகள் தங்கள் கடைசி இராணுவ தளங்களிலிருந்தும் முழுமையாக விலகிக்கொள்ளவுள்ளன.
வரலாற்று வெற்றி
ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது சுமார் 4,500 அமெரிக்கச் சிப்பாய்கள் உயிரிழந்தனர்.

இவ்வாறான பின்னணியில், அமெரிக்கப் படைகளின் வெளியேற்றமானது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என ஈரானும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களும் கொண்டாடி வருகின்றன.
அதேவேளை, மத்திய கிழக்கில் ஈரான் மீதான இராணுவ அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அமெரிக்கப் படைகளின் இந்த வெளியேற்றம் ஈராக்கிய அரசியல் மற்றும் பாதுகாப்புத் தீர்மானங்களில் ஈரான் தனது கரங்களை மேலும் வலுப்படுத்தவே வழிவகுக்கும் என பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மறுபுறம், ஈராக்கில் தற்போது உருவாகியுள்ள பாதுகாப்புக் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, 'இஸ்லாமிய அரசு' (ஐ.எஸ்) தீவிரவாத இயக்கம் மீண்டும் தலையெடுக்கக்கூடும் எனவும், அதற்கான நகர்வுகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ஈராக்கிய மற்றும் குர்திஷ் பாதுகாப்புத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.