இலங்கையில் ரஷ்ய பெண்ணை திட்டமிட்டு தாக்கிய நபர்.. சாரதியொருவரின் துணிச்சலான செயல்
அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டியாக நடித்து, ரஷ்ய நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரைத் தாக்கிப் பணம் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை உனவட்டுன சுற்றுலா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 5 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து, உனவட்டுன பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 40 வயதுடைய ரஷ்யப் பெண்ணே இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சந்தேகநபர் தன்னை ஒரு சுற்றுலா வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, கடந்த 12 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் இரவு உணவு அருந்த எனக் கூறி குறித்த பெண்ணை முச்சக்கரவண்டியொன்றில் காலி நகருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணம் கோரி மிரட்டல்
அங்கு வைத்து சந்தேகநபர் அப்பெண்ணிற்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுக்க முற்பட்டுள்ளார்.

அதனை அப்பெண் கடுமையாக எதிர்த்ததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், அவரது கையடக்கத் தொலைபேசியைப் பறித்துக்கொண்டதுடன், 35,000 ரூபா கப்பம் கோரி மிரட்டியுள்ளார்.
அதன்பின்னர் மீண்டும் அந்தப் பெண் ஹோட்டலுக்கு முச்சக்கரவண்டியில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அப்பெண்ணின் முகம் மற்றும் தலையில் தாக்கிய சந்தேகநபர், அவரிடமிருந்த 20,000 ரூபா பணத்தையும் பலவந்தமாகப் பறித்துள்ளார்.
இதன்போது, முச்சக்கரவண்டி சாரதி உடனடியாகத் தலையிட்டுத் தாக்குதலைத் தடுத்ததுடன், அப்பெண்ணின் கைப்பையைப் பாதுகாத்து மீட்டுக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உதவிய சாரதி..
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் கடந்த 13 ஆம் திகதி உனவட்டுன சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தனது விசா காலம் நிறைவடைந்ததால் அவர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சான்றுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த உனவட்டுன சுற்றுலா பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் காலி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொள்ளை, தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்டமை உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் நாளை (19) காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam