வங்காள விரிகுடாவில் உருவானது ஆபத்து! இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய ஆழ்கடல் பகுதிகளில் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்குக் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் இன்று (நவம்பர் 18) பிற்பகல் 3 மணி முதல் நாளை (நவம்பர் 19) பிற்பகல் 3 மணி வரை இந்த எச்சரிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, தெற்கு மற்றும் அதனை அண்மித்த மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள 'அக்வான்' (Akvan) தீவிர சூறாவளி, இன்று காலை 11.30 மணியளவில் 13.1° வடக்கு அட்சரேகை மற்றும் 85.4° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.

இது திருகோணமலையிலிருந்து சுமார் 680 கிலோமீற்றர் வடகிழக்கில் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து வரும் இந்தச் சூறாவளி, எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையில், நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்புகள்
அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மறு அறிவித்தல் வெளியாகும் வரை 10°N–20°N மற்றும் 80°E–95°E ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குக் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலார்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே குறித்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
