கைதைத் தொடர்ந்து புதிய சர்ச்சை! சத்தாரதன தேரருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு
ராஜாங்கனை சத்தாரதன தேரர், பௌத்த துறவிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து பௌத்த பிக்குவாகத் தன்னை அடையாளப்படுத்தி வருவது எவ்வாறு சாத்தியமாகிறது எனக் கேள்வி எழுப்பி, சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளது.
முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த குறித்த செயற்பாட்டாளர்கள், சத்தாரதன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
உரிமை உள்ளதா..
பௌத்த விவகாரத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் உபசம்பதா பெற்ற பௌத்த பிக்குகளின் பதிவேட்டிலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில், அவர் தொடர்ந்து பௌத்த காவியுடை அணிவதற்கும் தன்னை ஒரு பௌத்த பிக்குவாக அடையாளப்படுத்துவதற்கும் சட்டரீதியான உரிமை உள்ளதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பௌத்த விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் 42ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டிய செயற்பாட்டாளர்கள், பதிவு செய்யப்பட்ட பௌத்த பிக்குவாகத் தவறாகத் தன்னை அடையாளப்படுத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.
அத்துடன், ஆள்மாறாட்டம் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் ஏற்பாடுகளையும் சுட்டிக்காட்டிய அவர்கள், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சமூக ஊடகங்களில் சத்தாரதன தேரர் அவமதிப்புக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், ஏனைய பௌத்த பிக்குகளை வாய்மொழியாகத் தாக்கி வருவதாகவும் குறித்த குழுவினர் குற்றம் சாட்டினர்.
சத்தாரதன தேரர்
அநுராதபுரம் ருவன்வெலிசாய மகா விகாரைக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய அவர்கள், அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவை ஒழுங்கமைப்பதில் சத்தாரதன தேரர் முக்கிய பங்காற்றியதாகக் குற்றம் சாட்டினர்.
இந்த மோதல் சம்பவம் பௌத்த மதகுருமார்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், சம்பவத்தில் அவரது தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சத்தாரதன தேரர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிவில் செயற்பாட்டாளர்கள் குழு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து சத்தாரதன தேரர் ராமண்ண மகா நிகாயவிலிருந்து முன்னதாக நீக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கிடையில், அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் நேற்று (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.