கைது செய்யப்பட்ட ஆனந்த பாலித 3 வருடங்களாக மேற்கொண்ட பெரும் மோசடி! அம்பலமாகும் தகவல்
தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டமை, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் மாத்திரமானதாகும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர் மூன்று வருடங்களுக்குள், மேலதிக நேரக் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெற்று பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்திற்குள்ளும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, அது தொடர்பில் சில விளக்கங்களை வழங்க வேண்டியுள்ளது.
சட்டவிரோதமாக பெற்றுக் கொண்ட கொடுப்பனவுகள்
ஆனந்த பாலித, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய மற்றும் மொத்தப் பொருட்கள் பிரிவில் எரிபொருள் நிரப்பும் பணியாளராகப் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக, 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அவர் சட்டவிரோதமாக மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.
இந்த முறைப்பாட்டை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சித் ஹெட்டியாராச்சி அவர்கள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்திருந்தார்.

குறித்த காலப்பகுதியில், ஆனந்த பாலித சட்டவிரோதமாக மேலதிக நேரக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையின் கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, மேலதிக விசாரணைக்காக, இது தொடர்பான முறைப்பாடு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பப்பட்டது.
மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இதன்போது, 31,601 ரூபாய் பெறுமதியான மேலதிக நேரக் கொடுப்பனவை சட்டவிரோதமான முறையில் பெற்றுக் கொண்டமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதனைத் தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்படுவதாகவும், வரவு செலவுத் திடடத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களை அரசாங்கம் கைது செய்வதாகவும் சித்தரிக்க முயற்சி செய்யப்படுகின்றது.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என்பதற்காக எந்வொரு அரசியல் தலைவரும், தொழிற்சங்க் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார் என்பதற்காக எந்தவொரு தொழிற்சங்கத் தலைவரும், தனது கடமைகளை நேர்மையாகச் செய்கின்றார் என்பதற்காக எந்தவொரு அரச அதிகாரியும் கைது செய்யப்படுவதில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam