ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் பதற்றம்! வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் உச்சக்கட்ட எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு உதவக் கூடாது என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பின் எதிரொலியாக ஈரானிடம் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், அதற்கு பதிலடியை வழங்கும் பொருட்டு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.
ட்ரம்பின் அறிவிப்பு
இந்தநிலையில், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே ஈரான் மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாபி தெரிவிக்கையில்,
“அமெரிக்காவின் பொருளாதார அழுத்த தந்திரங்களுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளிக்க வேண்டாம்.
ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் அறிவித்துள்ள பொருளாதாரப் போர் நடவடிக்கையில் அண்டை நாடுகள் இணைந்தால், ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே உள்ள எண்ணை கப்பல் வழித்தடங்களை ஈரான் குறிவைக்கக்கூடும்.

ட்ரம்ப் ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம்.
ட்ரம்ப்பின் பொறுப்பற்ற செயல்பாடுகளும் ஈரான் மீதான தாக்குதல்களும் பல நாடுகளிடையே அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரித்துள்ளன.
ட்ரம்ப் அணுசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அணு சக்தி பாதுகாப்பின்மையையே உருவாக்கி உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.