அரச ஊழியர்களின் இடமாற்றம்! வெளிவந்துள்ள புதிய சுற்றறிக்கை
முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரச நிர்வாக சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமான சேவை இடத்தில் 05 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுவர் என்பதுடன், வேறு சேவை இடத்தில் 02 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த அதிகாரிகளுக்கும் இடமாற்றத்திற்குத் தகுதி பெறுகின்றனர்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பு
2027 வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்களை இணையவழி முறைமை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அடிப்படை விபரங்கள் மற்றும் முந்தைய சேவை இடங்கள் பற்றிய விபரங்களும் சரியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். சுற்றறிக்கையின்படி, 2026 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடைக்கால/வழக்கத்திற்கு மாறான இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடு
வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், இடமாற்றக் கட்டளைக்கு எதிரான மேன்முறையீடு அக்கட்டளை அதிகாரிக்குக் கிடைத்த திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2027ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வருடாந்த இடமாற்ற முறைமையின் கீழ், குறித்த அதிகாரிகளின் சேவைக்காலம், சேவை இடம் மற்றும் இடமாற்றக் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்டு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
















