450 கோப்புகள் - காசோலைகள் எங்கே..! மகிந்தவை மறந்து போன என்பிபி அரசாங்கம் - அரசியல் மேடையில் அதிரடி காட்டிய ஜோன்ஸ்டன்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிக்கையையும், வழங்கிய வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றத் தவறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச
தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சக் காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் 450 கோப்புகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துகள் தற்போது மறக்கப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மகிந்த ராஜபக்ச பெற்றதாகக் கூறப்பட்ட காசோலைகளின் இலக்கங்கள் தெரியும் என்றும், தொகைகள் தெரியும் என்றும், ஹோட்டல்கள் குறித்தும் தெரியும் என்றும் கூறினார்கள். இப்போது இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றன. அவற்றுக்கு என்ன நடந்தது? எதுவுமே இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஒரே பேனா கையெழுத்தில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதாகக் கூறிய போதிலும், தற்போது அரிசியின் விலை சுமார் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாக்குகள்
மேலும், நெல் உற்பத்தி தொடர்பில் பெருமையாகப் பேசிய அரசாங்கம், தற்போது பல இலட்சம் தொன் அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ரஜரட்ட மற்றும் பொலன்னறுவை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அவர்களின் நெல் அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனவும், ஒரு கிலோ நெல்லை சுமார் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை ‘சட்டவிரோத மதுபானம் விற்பவர்கள்’ எனக் கூறி அவமதிப்பதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய முன்னாள் அமைச்சர், அவர்கள் மக்களின் அறிவாற்றலை அவமதிக்கும் வகையில் செயற்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் கூறிய ‘மலர் செடிகளுக்கு’ பதிலாக நாடாளுமன்றத்திற்கு ‘மிதியடித் துண்டுகள் போன்றவர்கள்’ வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.