இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி!
இலங்கையில் மனிதாபிமான அடிப்படையிலான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக கடந்த 24 ஆண்டுகளில் அமெரிக்கா 130 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கிய நாடாக அமெரிக்கா திகழ்கிறது.
இந்த உதவியின் மூலம் இலங்கையில் கண்ணிவெடிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை
நேற்று (28.11.2026) நடைபெற்ற கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கான நன்கொடையாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி டேவிட் மையர்ஸ் இதனைத் தெரிவித்தார்.
கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதன் மூலம் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்பவும், விவசாயிகள் தங்களது நிலங்களில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குழந்தைகள் அச்சமின்றி விளையாடவும் முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் நோக்கங்களான தெளிவான இலக்குகள், அளவிடக்கூடிய பெறுபேறுகள் மற்றும் திட்டமிட்ட நிறைவு ஆகியவற்றுக்கு இலங்கையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதியுதவி
எஞ்சியுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை நிறைவு செய்வதில் இலங்கை தலைமைத்துவம் ஏற்று செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை முழுமையான கண்ணிவெடி அச்சுறுத்தலற்ற நாடாக மாறுவது, இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி, அமெரிக்காவின் உதவியும் உள்ளூர் பங்காளித்துவமும் இணைந்தால் எத்தகைய முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதற்கும் முக்கிய எடுத்துக்காட்டாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் இறுதிக்கட்டத்தை இலங்கை வெற்றிகரமாக முன்னெடுக்கும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.