நாளைய வேலைநிறுத்தம்: மலையக ஆசிரியர் சங்கங்களின் அதிரடி அறிவிப்பு!
நாளை (30) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமது சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என மலையக ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (29) ஹட்டன் நகர மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
வேலைநிறுத்தப் போராட்டம்
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். ரோஹன், மலையக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஈ. மகேந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆசிரியர் சங்க ஹட்டன் வலயச் செயலாளர் ஆர். கனகமூர்த்தி மற்றும் அச்சங்கத்தின் பிரதேச செயலாளர்களான ஏ. நிரஞ்சனி, எல். விஜயசுந்தரம் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் .

இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தமது சங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் நாளை வழமைபோன்று பணிக்கு சமூகமளித்து பாடசாலைகளுக்குச் செல்வார்கள் எனத் தெரிவித்தனர்.
இதற்கமைய, மலையகத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும், எனவே மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பாடசாலைகளுக்கு வருகை தருமாறும் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.