இலங்கை மக்களுடன் கூட்டுசேர அமெரிக்கா எதிர்பார்ப்பு
இலங்கை மக்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 73வது சுதந்திர தின விழா நிகழ்வின்போது இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களின் செயல் உதவி செயலாளர் டீன் தோம்சன் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
73 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையும் அமெரிக்காவும் அபிவிருத்தியில் பங்காளிகளாக இருந்து வருகின்றன.
இலங்கை மக்கள் சவால்களை எதிர்கொள்ளும் போதும், வலிமையைப் பெறும்போதும் அமெரிக்கா அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆதரவளித்து வருவதாக தோம்சன் குறிப்பிட்டுள்ளார்.