ஈரான் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை முடக்க அமெரிக்கா முடிவு
மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கும் செயல்களில் ஈடுபடும் ஈரானின் ஏர்லைன்ஸ்கள் உலக நாடுகளில் தரையிறங்குவதற்கும், எரிபொருள் நிரப்புவதற்கும், பயணச்சீட்டு விற்பனை செய்வதற்கும் உள்ள வாய்ப்புகளை அமெரிக்கா முடக்கும் என அந்த நாட்டின் கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானின் கடல்சார் விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'பெர்சியன் வளைகுடா நீரிணை ஆணையம்' என்ற அமைப்பின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட்
இந்தத் தடைகள் குறித்து அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் தனது 'X' (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஈரானின் இந்த புதிய ஆணையத்தை ஒரு "கேலிக்கூத்து" என அவர் சாடியுள்ளார்.
அவர் மேலும் தனது பதிவில்,
"ஈரானின் இந்த புதிய அமைப்புக்கு எந்தவொரு நிறுவனமோ அல்லது நாடுகளோ சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கோ அல்லது அதனை உதவித்தொகை என்ற பெயரில் மறைத்து வழங்குவதற்கோ எதிராக நாங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளோம்.

அத்துடன், ஈரானிய விமான நிறுவனங்கள் பிற நாடுகளில் தரையிறங்குவது, எரிபொருள் நிரப்புவது மற்றும் பயணச்சீட்டுகளை விற்பனை செய்வது ஆகிய விவகாரங்களில் அவற்றுக்கு உள்ள அனுமதியை நாங்கள் முடக்குவோம்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் ஒரு திருப்திகரமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே இந்தத் தீவிரமான நடவடிக்கைகள் முடிவுக்கு வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.