ஈழத்தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்பை நோக்கிய அமெரிக்க காங்கிரஸ் யோசனைக்கு ஆதரவு
ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்பை நோக்கி அமெரிக்கா பணியாற்ற வேண்டும் என்றும் இலங்கை அரசால், அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையை அங்கீகரிக்கவேண்டும் என்றும் அமெரிக்காவை வலியுறுத்தும் முக்கிய தீர்மானத்துக்கு, மேலும் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, காங்கிரஸின் இரண்டு பிரதிநிதிகள் - கேப் வாஸ்குவேஸ் மற்றும் ஜே. ஹிலாரி சால்டன்(Gabe Vasquez and J. Hillary Scholten)ஆகியோர் இந்த வாரம் தீர்மானத்தை ஆதரித்து ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை
இதனையடுத்து, குறித்து யோசனைக்கான இணை அனுசரணையாளர்களின் எண்ணிக்கையை பத்தாக உயர்ந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு, 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மே 18ஆம் திகதி உலகெங்கும் தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக அனுஷ்டிக்கப்பட்ட பின்னர், பிரதிநிதி வைலி நிக்கல் இந்த யோசனையை காங்கிரஸில் முன்வைத்துள்ளார்.
ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலை உட்பட கடந்தகால வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், நிரந்தரமான அமைதியான தீர்மானத்திற்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்படவும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
அத்துடன், ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்தவும், இந்தோ - பசிபிக்கின் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி ஒத்துழைக்கவும் அமெரிக்காவை இந்த யோசனை வலியுறுத்துகிறது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக வாதிடவும் மற்றும் பாதுகாக்கவும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் குறித்த யோசனை வலியுறுத்துகிறது.
அதேநேரம், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி உழைப்பதற்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திர வாக்கெடுப்பு செயல்முறையை மேற்கொள்ளவும் இந்த யோசனை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த யோசனையில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையை அமெரிக்க அரசும், சர்வதேசமும் அங்கீகரிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |